ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரை ஊவா மாகாண ஆளுநரின் மகன் தாக்கியதாகவும், குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, சந்தேகநபர் வாகனத்தையும், கையடக்கத் தொலைபேசியையும் தென் மாகாணத்தில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு, பொலிஸார் தவறாக வழிநடத்தியதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் தற்போது வேறு பகுதியில் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட வாகனம் மற்றும் கைத்தொலைபேசியை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என சந்தேகநபரின் தந்தையான ஆளுநர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநரின் ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டு விளக்கமளிப்பதாக தெரிவித்துள்ளது.