குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி,
“ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைய மாணவர் உட்சேர்க்கை நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகளே காரணமாகும். எனவே அவற்றை சீரமைக்க வேண்டும்.
அதே போன்று குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது. அதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு சில பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்படக்கூடும். அவற்றை வேறொரு பாடசாலையுடன் ஒருங்கிணைந்த பாடசாலையாக செயற்படுத்தமுடியும்.
அதே நேரம் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு முன்னதாக அப்பிரதேசத்தின் இனத்துவப்பரம்பல், சனத்தொகை , சமூக மற்றும் பொருளாதார காரணிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.