மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த அமைச்சர் பணிப்புரை
மாணவர்களுக்காக இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC)பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சேவை 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்கு ஆண்டுதோரும் 2000மில்லியன் ரூபா ஒதுக்குகிறது.
போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் அனுப்பப்படும்.
தீவு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், ஒரு பேருந்து மூலம் அதிகபட்ச பள்ளிகளுக்கு செல்லும் ஒரு பேருந்து சுமார் மூன்று பாடசாலைகளை உள்ளடக்குவதுடன், 500 புதிய பேருந்துகள் கிட்டத்தட்ட 1,500 பள்ளிகளை உள்ளடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிசு செரிய திட்டத்தின் நோக்கம், பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பை வழங்குவதாகும்.
இந்தச் சேவையானது மானியக் கட்டணத்தில் செயல்படும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப ஊக்குவிப்பதோடு, குடும்பங்களுக்கு நிதி சுமையும் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.