3 13
இலங்கைசெய்திகள்

ஜெனீவா விவகாரம் தொடர்பான சாணக்கியனின் கேள்விகள்! நழுவும் அரசாங்கம்

Share

ஜெனிவா விவகாரம் தொடர்பான தனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசாங்கம் நழுவிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் இறுதியில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றும் செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரதமரிடத்தில் சில கேள்விகளை முன்வைக்கின்றேன். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்தச் சபையில் தெளிவுப்படுத்த முடியுமா?

மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை தனித் தனியாக முன்வைத்து, அந்தப் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் வேறு சர்வதேச மாற்று யோசனையை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான பரிந்துரை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?” என கேள்வி எழுப்பினார்.

இதன்போது எழுந்து பதிலளித்த பிரதமர் கலாநிதி பிரதமர் ஹரிணி அமரசூரிய,

“நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இதற்கு முன்னர் வேறு கேள்விகளையே பிரதமரிடத்திலான கேள்வியில் கேட்டிருந்தார். அதற்காகவே நான் தயாராக இருந்தேன். ஆனால், இந்தப் புதிய கேள்விகள் நேற்றைய தினமே (செவ்வாய்க்கிழமை) கிடைத்தது.

இதனால் இதற்குப் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி,

“பிரதமர் தயாராக வந்த கேள்விகளுக்கு வேண்டுமென்றால் பதிலளிக்குமாறு கேட்கின்றேன். நான் அனுப்பியிருந்த கேள்விகளை நாடாளுமன்றத்தில் கொள்கைகள் தொடர்பில் கேட்க முடியும் என்று கூறியதால் அந்த கேள்விகளை மாற்றினேன்” என்றார்.

இதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ, “பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே அவர் பதில்களைத் தயாரிக்க வேண்டும். அவர் கேள்விகளுக்குப் பதில்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த போது, கேள்விகளை மாற்றியுள்ளீர்கள்.

புதிய கேள்விகளை முன்வைத்துள்ளமையால் பிரதமரிடத்திலான அடுத்த கேள்வி நேரத்தில் அவர் பதிலளிப்பார். எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்” என்றார்.

இதனையடுத்து, மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி,

“நான் முதலில் கொடுத்த கேள்விகளை மீளப்பெற்றுக்கொண்டு வேறு கேள்விகளை வழங்கியதாகக் கூறுவது தவறான நிலைப்பாடாகும். நான் முதலில் வழங்கிய கேள்விகள் நிலையியல் கட்டளைக்கு அமைய மாற்ற வேண்டும் என்று கூறியதால் நான் மாற்றினேன்.

நான் எழுதிக் கொடுத்த கேள்விகளை மாற்றவில்லை. ஏன் அரசாங்கத்தால் இதற்குப் பதிலளிக்க விருப்பமில்லை என்று புரிகின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாது.

இது முக்கியமான பிரச்சினையாகும். சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. வேலைகள் செய்யாமல் வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நேரத்தில் இந்தக் கேள்விகளில் பிரச்சினை இருப்பதாகக் கூறுவது கேள்வியில் இருந்து நழுவிச் செல்வதாகும். இது அநீதியானது” என்றார்.

இதன்போது மீண்டும் பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “நாங்கள் கேள்வியில் இருந்து நழுவிச் செல்லவில்லை. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சபையில் உரையாற்றுவார்” எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...