செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.
செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் இனந்தெரியாதோரால் இந்த நினைவுத்தூபி முதன்முதலில் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உடனடியாக புதிய நினைவுத்தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் இனந்தெரியாதோரால் இத் தூபி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தூபியைச் சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே (NPP) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

