மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து, இன்று (23) வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திசைவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த வினோதா ஜெகநாதன் (71) என்பவர் ஆவார். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். வீட்டில் பணியாற்றும் பணிப்பெண் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது, வீட்டிலிருந்த வினோதாவைக் காணவில்லை. இதன்போது வீட்டின் கிணற்றை அவதானித்தபோது அவர் சடலமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு மற்றும் தலைமையகப் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.