ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7 பகுதியில் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஊழல் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான நீதித்துறை திறனை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கான இடவசதியை மேம்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த நான்கு அரச கட்டடங்களையும், மேல் நீதிமன்ற வளாகங்களாக உடனடியாகப் பயன்படுத்த, நீதி அமைச்சகத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீதிமன்றங்களாக மாற்றப்படும் இல்லங்கள்
மேல் நீதிமன்ற வளாகங்களாக மாற்றப்படவுள்ள அந்த நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களின் விவரங்கள்:
இல. B 88, கிரகெரி வீதி, கொழும்பு 7: முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலு்ம் அமுணுகம பயன்படுத்திய இல்லம்.
இல. C 76, பௌத்தாலோக மாவத்தை: மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய இல்லம்.
இல. B 108, விஜேராம மாவத்தை: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய இல்லம்.
இல. B 12, ஸ்டான்மோர் சந்திரவங்கய வீதி: முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். சம்பந்தன் பயன்படுத்திய இல்லம்.