நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துறைமுகங்களில் ஏற்பட்ட நெறிசல் காரணமாக இதற்கு முன்னர் 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொள்கலன் விடுவிப்பில் அமைச்சர்களால் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும். அவ்வாறு எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
ஒரு சிலரால் எவ்வித அப்படையுமின்றி இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிவப்பு நிற லேபல் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மஞ்சள் நிற லேபல் ஒட்டப்பட்டவை ஸ்கேன் பரிசோதனைக்கு அல்லது அவற்றிலுள்ள பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பச்சை நிற லேபல் ஒட்டப்பட்டவை பரிசோதனைகள் இன்றி பரிசோதனைகள் இன்றி, ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுவிக்கப்படக் கூடியவையாகும்.
நாட்டில் வருட இறுதியில் அல்லது புத்தாண்டு காலத்தில் கொள்கலன் விடுவிப்பில் இவ்வாறான நெறிசல்கள் ஏற்படுவது இயல்பானதாகும்.
சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரைக்கமையவே கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் அண்மையில் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்கலன்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனவரி 30ஆம் திகதி ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
திறைசேரியின் பிரதி செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினால் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொள்கலன் விடுவிப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஸ்திரமாகக் கூற முடியாது.
சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இதற்கு முன்னர் இவ்வாறு 14 சந்தர்ப்பங்களில் சுமார் 1000க்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவித்துள்ளது” என கூறியுள்ளார்.