வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி கோரி ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் கடிதம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் 2025 டிசம்பர் மாதத்திற்கான மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடி வழங்குமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த இயற்கை பேரழிவால், குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பலரது இயல்புநிலை பாதிக்கப்பட்டு, வருமானங்களும் இழக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இந்த பாதிப்பிலிருந்து முற்றாக மீளவில்லை.

நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாகப் பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இது அமைந்துள்ளது.

வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நோக்கம்: பொருளாதாரத்திலும், உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன் கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்கான நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version