தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில் 

24 6689375d6a9e9

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்

தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் தேசத்தின் தலைவிதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி (Galle) மாவட்ட மாநாட்டில் இன்று (06.07.2024) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ”பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையின் பாதையில் கொண்டு செல்லும் எனது பணியை முடித்து விட்டதால் இனி தேசத்தின் எதிர்காலம், மக்கள் கையிலேயே உள்ளது.

எவரும் தயாராக இல்லாத போதே, நான் தேசத்தை பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது ஜே.வி.பி.யைக் காணவில்லை. மற்றவர்களும் காணாமல் போனார்கள்.

எனினும், நான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுக்களை ஆரம்பித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டதிலேயே இன்று நாடு ஸ்திரதன்மையை அடைந்து கொண்டிருக்கிறது.

அத்துடன், தேசம் தற்போதைய பாதையில் செல்ல வேண்டுமா அல்லது வேறு வழியில் செல்ல வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி, எமது சித்தாந்தத்தை, முன்னரே ஏற்று கொண்டிருந்தால் நாடு, இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்காது.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் வேறு வழியில் சென்று புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். எனவே, தற்போது கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஆகையால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும், மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version