tamilnih 18 scaled
இலங்கைசெய்திகள்

மக்களிடம் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

Share

கோவிட் காலத்தில் பின்பற்றிய சுகாதார விதிகளை மீண்டும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் பதிவாகியுள்ள ‘ஜே.என். 1’ புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருக்கின்றது என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்தவொரு கோவிட் தொற்றாளரும் பதிவாகவில்லை.

எனினும், கடந்த கோவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் கீழ், உயர் தரத்திலான மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கோவிட் நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது, நாட்டின் நிதி நிலை சீராக முன்னேறி வருவதால், அத்தியாவசிய மருந்துகளை பெற, அரசின் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களை பெறுவதற்கான செயல்முறையை வெளிப்படையானதாக மாற்றும் நோக்கத்துடன், கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக, கொழும்பு மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கணினிப் பிரிவுகளின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

அதன்படி, எதிர்காலத்தில் குறித்த கொள்முதல் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தர ஆய்வுகூடத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதன் மூலம் கொள்திறன், மனித வளம் மற்றும் அதன் கட்டமைப்பு மாற்றங்களை இந்த வருடத்தில் மேற்கொள்ள முடியும். மேலும், இந்நாட்டுக்குத் தேவையான 850 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அந்த மருந்துகளில் மக்களின் உயிர் காக்கும் அனைத்து மருந்துகளும் எங்களிடம் உள்ளன. தொடர்ந்து, கண்களுக்குத் தேவையான லென்ஸ்கள், இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்கள் (ஸ்டென்ஸ்), எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

அதேவேளை, கடந்த வருடம் டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையான நிலை என்பதோடு டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.

அத்துடன், பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உதவியுடன் சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால், கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

எனவே, இந்த நிலையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதன்படி, ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக நோய்த்தடுப்பு தடுப்பூசியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரை கேட்டுக்கொள்கின்றோம்.

இது தவிர, இந்தியாவில் பதிவாகிவரும் புதிய ‘ஜே.என். 1’ கோவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது.

தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். ‘ஜே.என். 1’ கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், இது தொடர்பாக மாதிரி சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்தியாவில் பதிவாகியுள்ள புதிய கொவிட் பிறழ்வு கொண்ட நோயாளிகள் யாரும் இலங்கையில் பதிவாகவில்லை.

ஆனால், கடந்த கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...