ஆளும் தரப்பிலுள்ள இரு மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயுள்ள போட்டித்தன்மை காரணமாக அபிவிருத்தித்திட்டங்கள் தடை ஏற்படுத்தப்படுவதுடன் உள்ளூராட்சி மன்றங்களினால் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படமுடியாத நிலையும் காணப்படுவதாக வலிதென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களுக்குட்பட்டு எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.
அவ்வாறான திட்டங்கள் செய்து வருகின்றபோது இன்றைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையில் போட்டி நிலை காரணமாக பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
குறிப்பாக புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள ஆர்ஓ திட்டத்தை கல்லுண்டாய் வெளிக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது தற்சமயம் புங்குடுதீவுக்கே அமைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
குறித்த விடயத்தில் புங்குடுதீவுக்கே அது வழங்குவதற்கான திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை கல்லுண்டாய் வெளிக்கு மாற்ற கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனால் அந்தத் திட்டத்தை எங்கு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக குழப்ப நிலை காணப்பட்டு இறுதியாக புங்குடுதீவிற்கே வழங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இது தேவையற்ற குழப்பமாகவே தோன்றியது. இருவருக்குமிடையில் உள்ள போட்டி தன்னமயாலே இது உருவானது.
இவை தொடர்பில் உரிய இடங்களுக்கு நாங்கள் முறையிட்டுள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சிறிது காலம் பார்த்துவிட்டு ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றோம் என்றார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள கொழும்பு மாநகர சபையின் தவிசாளர் றோசி சேனநாயக்க தலைமையிலான குழுவினர் எமது பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளனர்.
எங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிடவுள்ளதுடன் எத்தகைய திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம் எனத் தெரிவித்தார்கள்.
குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உறுப்பினர்களான ரமணன் மற்றும் ஜிப்ரிக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
#SrilankaNews
Leave a comment