பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறை உள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அந்தப் பொறிமுறை பாதாள உலகத்தினரின் பண பலத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், இனிமேலும் இதனைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது என்றும் இன்று வலியுறுத்தினார்.
அரசாங்கத்திற்கே உரிய ஆயுதங்கள் பாதாள உலகத்தினரிடம் எவ்வாறு சென்றன என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இந்த ஆயுதக் குழுக்களிடம் உள்ள பணப் பலத்தால் இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகள் நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T-56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. இவற்றில் சுமார் 35 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுவிட்டன.இந்த ஆயுதங்களை வழங்கிய ஒரு இராணுவ கேர்னலின் வங்கிக் கணக்கிற்குப் பணம் கிடைத்திருப்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
மேலும், ஒரு காவல்துறை அதிகாரி தனது ஆயுதத்தை விற்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த விசாரணைகளில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகளும் வெளிப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் ஒரு ‘கருப்பு ஆட்சி’ (Parallel Regime) உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த ஊடுருவல் பல திணைக்களங்களில் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்: சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்கு வர உதவுவதற்காகச் சிலர் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகளை வழங்கியுள்ளனர்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்: தேசிய பாதுகாப்பிற்காகச் செயற்பட வேண்டிய சில அதிகாரிகள் பாதாளத் தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியுள்ளனர். சுங்கத் திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு உள்ளது.
இதன் விளைவாக, வெளிப்படையான அரசாங்கத்தைப் போலவே, அதே அளவு பலத்துடன் செயல்படும் ஒரு மறைவான கருப்பு ஆட்சி உருவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மட்டுமே இருக்க முடியும். இந்தக் கருப்பு ஆட்சியை ஒழிப்பதாக உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்” என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
