வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பல அவசர உத்தரவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாக பெரும்போக நெற்செய்கையைத்’ தேசியத் தேவையாகக் கருதித் தொடங்குவதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தினார்.
பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.
நாளைய தினம் (டிசம்பர் 8) மின் விநியோகத்தை முழுமையாக்க மின்சார அதிகாரிகளைப் பணித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீர் விநியோகத்தையும் முழுமையாக்க நீர் வழங்கல் அதிகாரிகளைப் பணித்தார்.
எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மீளத் திறக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் திறைசேரியால் வழங்கப்படும் . 15,000/- நிவாரணத்தை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த அனர்த்தத்தால் அநுராதபுரம் மாவட்டத்தில் முழுமையாகச் சேதமடைந்த 228 வீடுகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான துல்லியமான தரவுகளை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.