2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புத் துறைக்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த வருமானம் பெறுவோருக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில் புதிய வீடுகள் அமைத்தல்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோருக்காக 5,000 மில்லியன் ரூபா செலவில் விசேட வீட்டுத் திட்டங்கள். “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீட்டுத் திட்டத்தின் கீழ் பணிகளை ஒருங்கிணைத்தல்.
அனைத்து வீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு, நிதி அல்லது நிர்வாகக் காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை உடனடியாக நிறைவு செய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
வீடற்ற மக்களின் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் முதன்மை நோக்கம் என இந்தச் சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.