2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். அண்மையில் நாட்டை உலுக்கிய அனர்த்தம், அதற்கான அரசாங்கத்தின் பதிலளிப்பு மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்து அவர் முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை நாட்டை ஒன்றிணைத்துள்ளது என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
“எமது அன்பான உறவுகளை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தவர்களை மீளக் கொண்டு வர முடியாது என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஒரு சிறந்த தேசத்தை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும்,” என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்காக அரசாங்கம் பின்வரும் நிதி உதவிகளை அறிவித்துள்ளது.
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு ரூ. 25,000. அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ரூ. 50,000. வீடுகள் இல்லாதவர்களுக்கு மாதாந்தம் ரூ. 25,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும். 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு ரூ. 50,000 வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தின்போது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, உயிர்த்தியாகம் செய்த விமானப்படை வீரர் மற்றும் ஏனைய முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த நன்றிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
கலா ஓயாவில் இடம்பெற்ற பஸ் அனர்த்தத்தில் இருந்து 67 பேரை பாதுகாப்பாக மீட்க கடும் முயற்சி செய்திருந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், சிலர் நிலைமையைப் புரிந்து கொள்ளாது முகநூலில் (Facebook) மக்களைத் தவறாக வழிநடத்தும் விதமாகப் பதிவுகளைப் போட்டிருந்தார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சொத்து வரி 2026இல் விதிக்கப்படாது என்றும், 2027இல் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், இது சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிதி அமைச்சு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அவர் கருத்துக்களை முன்வைத்தார். அவசர காலத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை நாம் அடக்குமுறையாகப் பிரயோகிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.