தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

14 6

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

அதன் மூலம் 28மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்தத் தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக்குழுக்களின் மூலம் 75 ஆயிரத்து 589 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இவர்களில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடிய 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை ஏழு மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னைய தேர்தல்கள் போன்று இன்றைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக வாக்குப் பெட்டிகளுடன் சேர்த்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கான தபால் வாக்குகளும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்குமான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே இம்முறை அறிவிக்கப்படவுள்ளது.

Exit mobile version