பொலிசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை ஒரு போதும் ஏற்க முடியாது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஸ் தெரிவத்துள்ளார்.
நேற்றைய தினம் வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிக்கோ பொலிசாரால் தாக்கப்பட்டதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.
தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.
சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம். அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை. என்றுள்ளது.
#SrilankaNews