“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

28

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க திருச்சபையையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் அரங்கேற்றியுள்ள ஒரு நாடகம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக அவர் சாடினார். “அரசாங்கம் பாரிய சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், அதனை மறைக்கவே இவ்வாறான கைதுகளை முன்னெடுக்கிறது” என அவர் குற்றம் சாட்டினார்.

‘சேனல் 4’ ஊடகம் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்த சரத் வீரசேகர, சுரேஷ் சலே 2018-இல் சஹ்ரானைச் சந்தித்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றார். “2016 முதல் 2018 வரை அவர் மலேசியாவிலும், 2019-இல் இந்தியாவிலும் தூதரகப் பணிகளில் பணியாற்றினார். அவர் இலங்கையிலேயே இல்லாதபோது எவ்வாறு சஹ்ரானைச் சந்தித்திருக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

குண்டுத்தாக்குதலுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் இப்ராஹிம் (ஜே.வி.பி தேசியப் பட்டியல் உறுப்பினர்) வெளியில் சுதந்திரமாக உலாவும்போது, நாட்டிற்காகச் சேவையாற்றிய ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அநீதியானது என அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையானது நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை மனரீதியாகப் பாதிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version