வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று (04) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்ற அமெரிக்காவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வெனிசுலாவின் எதிர்காலத்தையும், அதனை யார் ஆள வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு. அந்த உரிமையைப் பறிக்க எந்தவொரு சர்வதேச சக்திக்கும் அதிகாரம் இல்லை.
நவீன நாகரிக உலகில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசுகளின் சுதந்திரம் ஆகியவை உலகளாவிய கொள்கைகளாகும். எவ்விதக் காரணமுமின்றி ஒரு நாட்டின் மீது இராணுவப் படையெடுப்பை நடத்துவது காட்டுமிராண்டித்தனமானது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த வலுக்கட்டாய இராணுவத் தலையீட்டை உலகில் எந்தவொரு ஜனநாயக நாடும் அங்கீகரிக்காது என நம்புவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
“நாங்கள் வெனிசுலாவின் சுதந்திரத்திற்காகவும் அதன் இறையாண்மைக்காகவும் உலக அரங்கில் உறுதியாக நிற்போம். இந்த அநீதியான இராணுவப் படையெடுப்பிற்கு எதிராக எமது கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.”
இலங்கையின் ஆளுங்கட்சிக் கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் ஜே.வி.பி, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராகத் தனது முதலாவது சர்வதேச கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

