அரசியலைச் செல்வம் குவிக்கும் ஒரு தொழிலாகப் பார்ப்பதை நிறுத்தி, அதனைப் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் தற்பொழுது நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் (SLMA) 99 ஆவது மற்றும் 100 ஆவது கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரின் அர்ப்பணிப்பைக் கௌரவித்தார்.
ஒவ்வொரு கடினமான காலகட்டத்திலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது. தாய்நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிக உயரிய பொறுப்பு இராணுவத்திடம் உள்ளது. அந்தப் பொறுப்பினை இராணுவத்தினர் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் அரசியல் என்பது குறுகிய காலத்தில் சொத்துக்களைச் சேமிக்கும் ஒரு வழியாகக் கருதப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கலாசாரத்தை மாற்றி, அரசியல்வாதிகள் தங்களை மக்கள் சேவகர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் புதிய யுகத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

