கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனேந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (நவ 18) நடைபெற்ற பாராளுமன்ற வரவு செலவு திட்ட குழு விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குப் பிறகு, 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 கைத்துப்பாக்கிகள், 9 ரிவால்வர்கள், இரண்டு ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

