நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை பராமரிப்பில் எடுத்து, அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு நபர்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தொலைபேசி எண்களை பதிவிடுபவர்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சில அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் தொலைபேசி எண்களை பதிவிட்டு, பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் தகவல்களை பெற்று பின்னர் நிவாரணம் வழங்குவதாகக் கூறியும், குழந்தைகளின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டும் அவர்களை பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் போக்கு காணப்படுகிறது.
மேலும், இந்த குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், அடிமைத்தனம் மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு ஆளாக நேரிடும்.
மேலும், ஒரு நபருக்கு குழந்தைகளை முறையான காவலில் எடுத்து பாதுகாப்பாக வளர்க்க அல்லது தத்தெடுக்க உண்மையான தேவை இருந்தால், இலங்கையில் நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பிறகு அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
அதேநேரம் சமூக ஊடகங்களில் தொலைபேசி எண்களை பதிவிடும் தெரியாத நபர்களுக்கு குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்குவதையும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பற்றி விசாரிப்பதையும் தவிர்க்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை இழந்து பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறிய குழந்தைகள் குறித்து யாராவது நிவாரணம் பெற வேண்டியிருந்தால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அல்லது குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

