சிவனொளிபாத மலை (Adam’s Peak) யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில் உள்ள ‘மஹகிரிதம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Building Research Organisation – NBRO) விசேட நிபுணர்கள் குழுவொன்று ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், அப்பகுதியில் பூமி உறுதியற்ற தன்மை நிலவுவதாக NBRO அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, ஹட்டன் நுழைவாயில் ஊடாகக் குறித்த உறுதியற்ற வலயத்தின் ஊடாகச் சிவனொளிபாத மலைக்குச் செல்வதைக் கட்டாயமாகக் மட்டுப்படுத்த வேண்டும் எனப் பொலிஸ் அறிவித்துள்ளது.
NBRO அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, ஹட்டன் நுழைவு வீதி ஊடாகச் சிவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தான நிலைமையாகக் காணப்படுகிறது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக அந்தப் பயணப் பாதையில் மட்டுப்படுத்தல்களை மேற்கொள்ள நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
யாத்திரையை மேற்கொள்ள எதிர்பார்க்கும் பக்தர்கள், தமது பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போதும், தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பயணப் பாதைகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
சிவனொளிபாத மலை யாத்திரை பருவம் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இடம்பெற்ற உடுவப் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.