வங்கிக் கடன் மற்றும் பொலிஸ் விசாரணையைக் கூறி அச்சுறுத்தி பணமோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி, திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாயை இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புவழிபுரத்தைச் சேர்ந்த பெண்ணின் தொலைபேசிக்கு கடந்த திங்கட்கிழமை (05) பிற்பகல் மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தங்களை தனியார் வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்திய அவர்கள், “உங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாதாள உலகக் குழுவினர் (செவ்வந்தி கும்பல்) 6 இலட்சம் கடன் பெற்றுள்ளனர்” எனக் கூறி பயமுறுத்தியுள்ளனர்.
பின்னர் FCID இன்ஸ்பெக்டர் பாலசூரிய மற்றும் ASP ராஜரத்னம் ஆகிய பெயர்களில் சிலர் பொலிஸார் போலக் கதைத்து, “உங்களைக் கைது செய்யப் போகிறோம், தப்பிக்க வேண்டுமானால் உடனடியாகப் பணம் செலுத்துங்கள்” என மிரட்டியுள்ளனர். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகத் தொலைபேசியைத் துண்டிக்க விடாமல் அப்பெண்ணைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அச்சமடைந்த அந்தப் பெண், தனது நகைகளை அடகு வைத்து ஒரு இலட்சம் ரூபாயை மர்ம நபர்கள் வழங்கிய மக்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
வேலையை விட்டு வீடு திரும்பிய கணவரிடம் விபரத்தைக் கூறிய பின்னரே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் பின்வரும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கு வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரின் பெயரில் 3 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கிற்கு ஒரு நாளைக்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை வைப்பிலிடப்படுவதும், அது உடனுக்குடன் வேறொரு கணக்கிற்கு மாற்றப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரும், அந்த மர்ம நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொலைபேசி ஊடாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
இனம் தெரியாத நபர்கள் தொலைபேசியில் வங்கி ஊழியர்கள் அல்லது பொலிஸார் எனக் கூறி அச்சுறுத்தல் விடுத்தால், பதற்றமடையாமல் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாதவர்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.