ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டவளை – கரோலினா பிங்கோயா தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இறந்த ஒருவரின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று (29.05.2025) தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் தோட்டத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசிப்பதாகவும், தங்கள் தோட்டத்தில் இறப்பவர்களை அடக்கம் செய்ய மயானம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் தோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஹட்டன் ஓயா அருகே உள்ள மயானத்தை ஒரு தனிநபர் கையகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தோட்டத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் நான்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை ஒரு தனிநபர் சட்டப்பூர்வமாக தனக்குச் சொந்தமானது என்று கூறி மறுத்ததால் பிங்கோயா தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், தனது தோட்டத்தில் உள்ள ஒரு தனியார் நில உரிமையாளர் அடக்கம் செய்வதற்காக தற்காலிகமாக ஒரு நிலத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாது என்பதால், தங்கள் தோட்டத்தில் இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய நிலம் வழங்குமாறு கோருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.