பணச் சலவை வழக்கு: முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு மீண்டும் திறந்த பிடியாணை!

images 10 2

பணச் சலவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகப் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இம்முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன, பி.எம். குணவர்தன, முத்துராஜா சுரேந்திரன் ஆகிய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

ஏனைய சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அச்சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, பிரதான நீதவான் இதன்போது மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து விரைவில் அறிக்கையளிக்குமாறு CID-க்கு உத்தரவிட்டார்.

குறித்த முறைப்பாடு எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Exit mobile version