கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர் எண்ணெய்க் கசிவு, இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் துரித நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்காக கொழும்பு துறைமுகத்துக்கு அப்பாலான கடற்பகுதியில், கப்பலொன்றிலிருந்து மசகு எண்ணெய்யை இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கசிவு ஏற்பட்டு, எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
இது தொடர்பில் துறைமுக அதிகாரசபையிடமிருந்து அவசர அறிவித்தல் கிடைத்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது 3 அதிவேகத் தாக்குதல் படகுகளையும் கடலோரக் காவல் படையில் இணைந்த பாதுகாப்புப் படகுடன் இணைந்து கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பியது.
இந்தக் கட்டுப்பாட்டு முயற்சியின்போது, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஆதரவும் பெறப்பட்டது.
ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் பயனாக, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த எண்ணெய்க் கசிவுப் பரவலானது திறம்படத் தடுத்து நிறுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.