அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ‘சம உரிமை இயக்கம்’ (Equal Rights Movement) இன்று (18) முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்:
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அபாய எச்சரிக்கைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மாத்திரமே வெளியிடப்படுகின்றன. இதனால் 25 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் தகவல்களைப் பெறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை கூட உரிய தமிழ் மொழிபெயர்ப்பு இன்றி வெளியிடப்பட்டமை பாரிய தவறாகும்.
தேர்தல் காலங்களில் சம உரிமை பற்றிப் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது நடைமுறையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் புறக்கணித்து ‘சிங்களம் மட்டும்’ என்ற பழைய பாதையில் பயணிக்கிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.
1956-ஆம் ஆண்டின் ‘சிங்களம் மட்டும்’ என்ற கொள்கை நாட்டிற்கு மூன்று தசாப்த கால யுத்தத்தையே பரிசாக அளித்தது என்பதை நினைவூட்டிய தேரர், மீண்டும் அத்தகையதொரு அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரத் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பங்களிப்பு வழங்கியுள்ளதால், அனைத்து அரச கருமங்கள் மற்றும் அவசர அறிவிப்புகளைத் தமிழ் மொழியிலும் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு சம உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.