நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை: தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 ஆகும்.
தற்போது சுமார் 220 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதன்படி, மேலும் 175 தாதியர் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், தாதியர் கல்லூரி அதிபர்களின் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாதியர் ஆசிரியர் ஆட்சேர்ப்பை உடனடியாக ஆரம்பித்து, விண்ணப்பித்தவர்களுக்கான பரீட்சைகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடத்தி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

