தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு நிலை விவாதம் இன்று முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை தொடரவுள்ளது. அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் இந்த விவாதம் நடைபெறும்.
இது தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நேற்று (நவ14) வரையில் நடைபெற்று வந்தது. நேற்று மாலை நடத்தப்பட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பின்வரும் வாக்குகளுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது:
குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழு நிலை விவாதம் முடிந்த பிறகு, மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.