தலைவாக்கலை, வட்டகொடை, யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, உடனடியாக மீண்டும் அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டை தோட்ட முகாமையாளர் நளின்குமார் மறுத்துள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் திகதி நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக இந்தத் தோட்டத்தில் நிலம் தாழிறங்கியதுடன், அங்குள்ள தொடர் லயன் வீடுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டன.
இதனால், 45 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, தோட்டத்திலுள்ள சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 16 லயன் வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகள் நாளுக்கு நாள் மேலும் தாழிறங்கி வருகின்றன.
இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில், சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியேறி, மீண்டும் அதே வீடுகளுக்குத் திரும்புமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள 31 வீடுகளைப் பரிசோதித்த போதிலும், மிக மோசமான அபாயத்தில் உள்ள இந்த 16 லயன் வீடுகளைக் கொண்ட தொகுதி இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பெருந்தோட்டத்தின் முகாமையாளர் நளின்குமாரிடம் எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பிரதேச செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வியும் குறித்த தோட்டத்துக்குச் சென்று மக்களைத் தெளிவுபடுத்தினர்.
அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பான இடங்களில் உள்ளவர்களை மீண்டும் அந்த இடங்களில் குடியமர்த்துமாறு தனக்குப் பணிக்கப்பட்டது.
அதன்படி, பாதுகாப்பான இடம் என NBRO ஆல் உறுதி செய்யப்பட்டு, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை மாத்திரம் மீளச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் குற்றஞ்சாட்டுவது போல, அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயகரமான இடங்களில் உள்ளவர்களையும் தாம் செல்லுமாறு கூறவில்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.