கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதற்கு முக்கிய காரணம்:
எந்தவொரு திட்டமிடலோ அல்லது சட்டதிட்டங்கள் குறித்த தெளிவோ இன்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே ஆகும்.
மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே மாவட்டமும் மக்களும் இந்த ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமையால் அதிகளவான உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட தலையீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டம்: வருடாந்தம் ஏற்படும் வெள்ளம் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க இயலாது. அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படத் தேவையான நடவடிக்கைகளைத் தயார்படுத்த வேண்டும்.
ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தீர்வைக் வழங்குவது தொடர்பில் இப்போதே கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் ஊடகங்களிடம் கூறினார்.
இந்த நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான அருண பனாகொட, சந்தன சூரியஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.