சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் ‘மஹகிரி தம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளாக உத்தேச பரிந்துரைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
அதற்கமைய, நிலவும் அபாய நிலையை குறைக்கும் நோக்கில் 6 பரிந்துரைகளை அந்நிறுவனம் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு சமர்ப்பித்துள்ளதுடன் , அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை தற்போதைய நிலையில் ஹட்டன் நுழைவாயில் ஊடாக இந்த உறுதித்தன்மையற்ற வலயத்தின் ஊடான பிரவேசத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இடத்தை இரவு வேளையில் ஒளியூட்டப்பட்டதாக வைத்திருப்பதும், நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்துவதும் கட்டாயமாகும் எனவும் அந்த கடிதத்தின் மூலம் உரிய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:
1.உறுதித்தன்மையற்ற நிலை ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள படிக்கட்டுத் தொடரின் சேதமடைந்த பகுதியை கொங்கிரீட் அல்லது ‘ரண்டம் ரப்பிள் மேசன்ரி’ (Random Rubble Masonry – RRM / கருங்கல் கட்டுமானம்) கொண்டு சீர்செய்ய வேண்டும் என்பதுடன், அதன் அத்திவாரத்தை தாய் பாறையுடன் இணைக்கும் வகையில் இரும்பு கம்பிகளைப் (Dowel) பயன்படுத்தி பொருத்த வேண்டும்.
2.மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மேலும் நீர் செல்வதைத் தடுப்பதற்காக, படிக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பகுதியில் குறைந்தபட்சம் 300 மி.மீ. உயரத்திற்கு பக்கச் சுவர்/தடுப்பு (Side wall/Kerb) ஒன்றை அமைக்க வேண்டும்.
3.உறுதித்தன்மையற்ற பாறைப் பகுதிகளில் உள்ள அனைத்து வெடிப்புகளையும் சுருக்கமடையாத சீமெந்து (Non-shrink cement grout) கலவையைப் பயன்படுத்தி அடைக்க வேண்டும்.
4.நுழைவு பாதை ஊடாக மேலும் சிதைவுகள் (Debris) செல்வதைத் தடுப்பதற்காக, அதன் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பாதைப்பகுதியின் வலது பக்கமாக சுமார் 500 மி.மீ. உயரமான பக்கச் சுவர் ஒன்றை அமைக்க வேண்டும்.
5.மண்சரிவு ஆரம்பித்த பகுதியில் படிக்கட்டுகளுக்கு மேலாக ஒரு கூரை போன்று தொங்கிக்கொண்டிருக்கும் அனைத்து தாவரப் பகுதிகள் மற்றும் மண்ணை மிகவும் அவதானமாக அகற்ற வேண்டும்.
6.மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் இரு பக்கங்களிலும் தங்கியுள்ள உறுதித்தன்மையற்ற புதர்களையும் அகற்ற வேண்டும்.

