அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய சபை!

dinesh gunawardena 1

Dinesh Gunawardena

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலேயே அவர் இதனை முன்வைத்தார்.

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் யோசனை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பொது உடன்படிக்கையின் மூலம் அரசியல் தீர்மானங்களை வழிநடத்துவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சபை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் குறித்த அரசாங்கத்தின் வரைவு யோசனை தொடர்பில் அந்தந்த கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் பெற்றுக்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கருத்துக்களுடன் மெருகூட்டப்பட்ட வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன் வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

17 துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் 12 நிலையான குழுக்களுக்கு மேலதிகமாக மூன்று குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுயாதீனமானவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, தேசிய காங்கிரஸ் போன்ற பாராளுமன்றத்தைப் பிரதிநிதப்படுத்தும் கட்சிகளின் குழுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version