ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இன்றையதினம் (நவ 15) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்ததாகத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தனது பதிவில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள நவம்பர் 21ஆம் திகதி பொதுப் பேரணி குறித்து சுமந்திரனுக்கு விளக்கமளிக்கவே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ITAK இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக, நிகழ்ச்சி நிரல் மற்றும் நாங்கள் எழுப்பும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எங்களது கடமையாகும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இரு தலைவர்களும் மிக முக்கியமானதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
“உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்த இந்தத் தேர்தல்கள் அவசியம். மேலும் அவை அரசியலமைப்பின்படி நடைபெறுவது மிக முக்கியம்,” என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

