யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் 4 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (30) அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நல்லூர் சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 4 கிலோகிராம் கஞ்சாவுடன் வரணிப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் போதைப்பொருள் கடத்தல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒப்பந்தத்தின் (Contract) அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சர்வதேசத் தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணப் பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதி ஒருவரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.