கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

articles2F6YDhCB6S7vQDq50VYCJH

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Sri Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சியில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாட்டில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

“இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்ப விழா நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

நவம்பர் 21 முதல் 23, 2025 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் அலங்கார மீன்களின் அதிசயங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பரந்த அளவிலான கடல்சார் பயன்பாடுகள் என்பன காட்சிப்படுத்தப்படும்.

இக்கண்காட்சிக்கு கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது. எனவே, மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றுப் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வின் பின்னர், உலக மீனவர் தினத்தை முன்னிட்டுப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

தபால் திணைக்களத்தினால் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

கடற்றொழிலில் இதுவரை குற்றம் இழைக்காத மீனவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

உரையில் அமைச்சர் வலியுறுத்தியது
அமைச்சர் சந்திரசேகர் தனது உரையில்.

இப்பிராந்தியத்தில் நடக்கும் மிகப்பெரிய கண்காட்சி இதுவாகும் எனப் பங்கேற்றுள்ள ஒருவர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, இதனை எமது நாட்டில் நடத்துவது பெருமையளிப்பதாகவும், இதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்கலாம் என்றும் கூறினார்.

“எமது நாட்டு கடல் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது விடயத்தில் ஜனாதிபதியின், ஏனைய அமைச்சர்களின், அரசாங்கத்தின் முழு ஆதரவும் எமக்கு இருக்கின்றது,” என்று உறுதியளித்தார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மூலம் கடல்வளத்தை நாசமாக்கும் சிறு மீனக்குழுவொன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர், திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், FAO, BOBP-IGO மற்றும் தெற்காசிய நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், இந்தியா, மாலைத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version