வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்கத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, படையினரின் முழுமையான சம்மதத்துடன் மீண்டும் மக்களிடமே கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேவையின் அடிப்படையில் இந்தக் காணி விடுவிப்பு இடம்பெறும் என்றும், இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இது ஒரு முக்கியமான நகர்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு வாகனத்தில் வாள் மீட்கப்பட்ட சம்பவம் போன்ற அசாதாரண சூழல்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ (Dithwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் குறித்தும் அமைச்சர் ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த ஒரு வீட்டிற்கு 50 இலட்சம் ரூபா வரையில் நட்டஈடு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். “சொந்தமாக ஒரு வீடு மாத்திரம் உள்ளவர்கள் அதனை இழக்கும்போது ஏற்படும் வலியை இந்த அரசாங்கம் உணர்ந்துள்ளது” என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால ஆட்சிகளைப் போலன்றி, தற்போதைய அரசாங்கம் நிதியைச் சிக்கனப்படுத்தியதன் மூலமே இவ்வளவு பாரிய தொகையை மக்களுக்காக வழங்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தைத் தனித்து நின்று எமது நாட்டு மக்களாலேயே கட்டியெழுப்ப முடியும் என்றும், வெளிநாடுகள் ஒருபோதும் முழுமையாக உதவப்போவதில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது வலியுறுத்தினார். டித்வா சூறாவளி போன்ற சவாலான காலப்பகுதியிலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1700 ரூபாவாக உறுதிப்படுத்தியிருப்பதை அவர் நினைவூட்டினார். அரசாங்கத்தின் இந்த அதிரடி மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல், கடந்த காலங்களில் ‘ராஜபோக’ வாழ்க்கை வாழ்ந்த ஒரு சில குடும்பங்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுமே தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் சாடினார்.
75 ஆண்டுகால ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து வீழ்த்தியுள்ள நிலையில், அனைத்து திசைகளையும் உள்ளடக்கிய ஒரு பலமான கட்டமைப்பைத் தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். பொய்யானப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், வறுமையை நன்கு உணர்ந்த ஒரு ஜனாதிபதி இருப்பதனாலேயே இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க நிவாரணங்கள் சாத்தியமாகியுள்ளன எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய முனைபவர்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.