இராணுவச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவையை இடைநிறுத்த இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
கடந்த யுத்த காலம் தொட்டு விடுமுறையில் செல்லும் இராணுவத்தினருக்கான விசேட போக்குவரத்துச் சேவைகளை இராணுவத் தலைமையகம் வழங்கி வந்தது.
கொழும்பில் இருந்து வார நாட்களில் அலவ்வை, மீரிகம, கணேமுல்லை, காலி, மாத்தறை, குருநாகல், தெல்தெனிய, கண்டி, கதுருவெல, மெதவச்சிய மற்றும் நாத்தாண்டிய வரை இராணுவத்தினருக்கான விசேட பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வார இறுதி நாட்களில் குறித்த பேருந்து சேவைகள் பதுளை, மஹியங்கனை, மொனராகலை மற்றும் சிலாபம் வரையும் நீட்டிக்கப்பட்டது.
இவற்றில் பயணம் செய்யும் சிப்பாய்கள், அதிகாரிகளிடம் இருந்து சிறுதொகையொன்றே அவர்களின் போக்குவரத்துக்காக அறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இராணுவத்தினரின் எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக தற்போதைக்கு மேற்குறித்த பேருந்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக இராணுவத்தினர் செல்ல வேண்டிய இடங்களுக்கு அருகாமையில் உள்ள புகையிரத நிலையம் வரை அவர்களுக்கு இலவச புகையிரதப் பயண வசதிகளைச் செய்து கொடுக்க இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக தங்களுக்கு மேலதிக போக்குவரத்துச் செலவு ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.