மன்னார் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 3) முதல் ஒரு வார காலத்திற்கு மாட்டிறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சியை விற்பனைக்குச் சேமித்து வைப்பதும், இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸா தெரிவித்தார்.
இந்த பேரிடரில் மன்னார் மாவட்டத்தில் கால்நடைகள் உட்பட ஏராளமான பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளன.இறந்த அந்த விலங்குகளின் இறைச்சி மனித நுகர்வுக்காகச் சந்தைக்குக் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முக்கிய சுகாதாரப் பாதுகாப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பேரிடர்களில் இறந்த விலங்குகளின் உடல்கள் மனித நுகர்வுக்காக விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் விழிப்புடன் இருப்பதாகச் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தங்கள் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அது சாத்தியமில்லை என்றால், சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர ஹொட்லைன் எண்ணான 1926-க்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதீப் பொரலெஸ்ஸா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.