கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொத்மலை அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக அணைக்கட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. “மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை” என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபடலாம் எனவும் கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
“கொத்மலை அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாகப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்” என்று அமைச்சர் மக்களுக்கு உறுதியளித்தார்.
சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

