மன்னார் மடுமாதா ஆடி திருவிழா
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச் சிறப்பாக இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
இன்று (02.07.2023) காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று சனிக்கிழமை (01.07.2023) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்றுள்ளது.
திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் அடிகளார் மற்றும் மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி ஆக தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் 1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் வருடம் (2024) ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்றைய தினம் திருவிழாவின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச் சொரூபத்தின் பின் விசேட விதமாக யூபிலி ஆண்டை பிரகடன படுத்துவதோடு, அதனை வெளிப்படுத்தும் முகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு ஆலய முன் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.