மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில், பொலிஸார் சமர்ப்பித்த கையால் எழுதப்பட்ட அறிக்கையைத் தட்டச்சு (Typed) வடிவில் இன்று (17) சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டைதீவில் உடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து விசாரணை செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி பாதிக்கப்பட்ட தாயார் ஒருவராலும், தீவக முன்னேற்றக் கழகத் தலைவராலும் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வசதிகள் இல்லை எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது பல வருடங்களுக்கு முந்தைய விடயம் என்பதால், விரிவான விசாரணைக்காகப் பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர்.
அதன்படி, நேற்று (16) செவ்வாய்க்கிழமை, நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் இராணுவத்தினரிடம் பெறப்பட்ட சாட்சிகள் அடங்கிய அறிக்கையை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினர் சமர்ப்பித்தனர்.
பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கை கையால் எழுதப்பட்டதாக இருந்ததால், அதன் முக்கியத்துவத்தைக் கருதி அதனைத் தட்டச்சு செய்து தெளிவான பிரதியாக இன்று (17.12.2025) மீண்டும் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியைப் பெற்றுத்தரும் நோக்கில் இக்கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்த அறிக்கையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.