‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைக்குத் துரித தீர்வு காணும் நோக்கில், கீழ்க்காணும் மாவட்டங்களில் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட வயல்நிலங்களில் படிந்துள்ள மணலை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது:
பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல்.
ஹுருலுவெவ, ரம்பக்கன் ஓயா மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்கள்.
குறித்த பயிர்ச்செய்கை நிலங்கள் அல்லது காணி உரிமையாளரின் மேட்டு நிலம் அல்லது அனுமதி பெறப்பட்ட வேறொரு காணிக்கு இலகு ரக போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி மணலைக் கொண்டு செல்லலாம்.
இதன்மூலம், நிலங்களை மீண்டும் தயார்படுத்திக்கொண்டு தேவையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமில்லாத ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்றி, அந்தப் பயிர்ச்செய்கை நிலத்தின் ஒரு பகுதியிலேயே களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பணியகம் பிராந்திய அகழ்வுப் பொறியியலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் அகற்றப்பட்ட அந்த மணல் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான முறையான அனுமதியை உரிய பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் GSMB குறிப்பிட்டுள்ளது.

