புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தனுக ரோஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அவர் 2019 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
30-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி வழக்குத் தொடர்ந்ததால், பழிவாங்கும் விதமாக அதிகாரிகள் தனிமைச் சிறைக்கு மாற்றி கொடுமைப்படுத்துவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் இன்ஹேலர்களைக்கூட அதிகாரிகள் பறித்துச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மனுதாரருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறைத் துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த மனுவுக்கு நவம்பர் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

