சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte)மற்றும் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று(02.12.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான (Mirihana) பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரத்வத்தே மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் காரை இல்லத்திற்குக் கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டதோடு, அவரது மனைவியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, தம்பதியினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.