வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் 18 வீடுகளுக்கு ரூ. 25,000 சிபாரிசு!

25 693c8bcce20f5

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தலையீட்டையடுத்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ள நீர் வீட்டுக்குள் உட்புகுந்த ஒரு வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும் போது, வெள்ள நிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப் பிரமாணம் ஆகியவற்றின்படி அவருக்கான கொடுப்பனவை வழங்க முடியும்.

முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version