‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக, இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தெமோதர ‘ஒன்பது வளைவு’ பாலம் (Nine Arch Bridge) அமைந்துள்ள பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய கலாசார நிதியம் எச்சரித்துள்ளது.
அப்பகுதியில் புதிய சுற்றுலா வலையமைப்பை உருவாக்க நிர்மாணிக்கப்பட்டு வந்த சில கட்டிடங்கள் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாகச் சேதமடைந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே தெரிவித்துள்ளார்.
ஒன்பது வளைவுப் பாலத்தை மின் ஒளியூட்டல் மற்றும் வசதிகளை மேம்படுத்த சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட பணிகள், இவ்வருட இறுதிக்குள் முடிவடையவிருந்தது. எனினும், தற்போதைய இயற்கை அனர்த்தத்தால் இதன் திறப்பு விழா அடுத்த ஆண்டிற்கு (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், இந்த முக்கிய சுற்றுலாத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இல்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். சேதங்களைச் சீர்செய்து, அடுத்த ஆண்டில் இதனைச் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை தொடர்வதால், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) அதிதீவிர மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை (Level 3) விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

