தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

images 11

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்குக் காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் குறித்துத் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம், யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே நேற்று (31) நடைபெற்றது.

அக்காணிகளின் உரிமம் மக்களுக்கே உரியது என்பது சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை முதற்கட்டமாக விரைவாக விடுவிக்கவும், ஏனைய காணிகளை 4 கட்டங்களாக விடுவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய தற்காலிகக் கட்டடங்களை அகற்றி வேறிடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்ட விடுவிப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விகாரை நேரடியாக அமைந்துள்ள நிலப்பரப்பு மூன்று தரப்பினருக்குச் சொந்தமானது. எனினும், அதற்கான மாற்றுக்காணி அல்லது நஷ்டஈடு குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் விளக்கமளித்த காணி உரிமையாளர்கள், “இது ஒரு யோசனையாகவே முன்வைக்கப்பட்டுள்ளது, இறுதி முடிவல்ல. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 3 ஆம் திகதி தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தனர்.

மூன்று வருடங்களாகத் தொடரும் தையிட்டி காணி விவகாரத்தில், மாவட்டச் செயலரின் இந்த முயற்சி ஒரு சாதகமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version